ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...*
வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.*
பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.*
உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.*
நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.*
ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.*
உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.*
திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.*
எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு." ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.*
" ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.*
கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.
No comments:
Post a Comment